ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திவ்யப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திருமங்கை ஆழ்வார்

ஆண்டாள் பாட்டி கண்ணிநுண்சிறுத்தாம்பு ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருக்கிறார். பராசரனும் வ்யாசனும் அங்கே வருகிறார்கள்.

வ்யாச: பாட்டி! இப்பொழுது நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஆண்டாள் பாட்டி: வ்யாசா! நான் திவ்யப்ரபந்தத்தில் ஒன்றான கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருந்தேன்.

பராசர: பாட்டி! இது மதுரகவி ஆழ்வார் இயற்றியது தானே?

ஆண்டாள் பாட்டி: ஆமாம். வெகு நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாயே!

வ்யாச: பாட்டி! ஆழ்வார்களின் சரித்திரத்தை கூறும் பொழுது ஒவ்வொரு ஆழ்வாரும் சில திவ்யப்ரபந்தங்களை இயற்றியுள்ளார் என்று கூறினீர்களே. அவற்றைப் பற்றி எங்களுக்கு விவரமாகச் சொல்லுங்கள் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: நிச்சயம் சொல்லுகிறேன் வ்யாசா. இவற்றை விவரமாக அறிந்து கொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருப்பது மிகவும் நல்ல விஷயம். நம்முடைய ஸ்ரீரங்கநாதரும் ஸ்ரீரங்கநாச்சியாரும் திவ்யதம்பதி என்று அழைக்கப்படுகிறார்கள். பகவானால் அனுக்கிரஹிக்கப் பட்டவர்கள். ஆதலால், ஆழ்வார்கள் திவ்யசூரிகள் (தெய்வீகமான புனிதமான பிறவிகள்) என்று அழைக்கப் படுவார்கள். ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் (தமிழ் ச்லோகங்கள்) திவ்யப்ரபந்தம் (பக்தி இலக்கியம்) என்று அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களுடைய திவ்யப்ரபந்தங்களால் சிறப்பிக்கப்பட்ட க்ஷேத்திரங்கள் திவ்ய தேசங்கள் (திவ்ய ஸ்தலங்கள்) என்று அழைக்கப்படுகின்றன.

பராசர: ஆஹா! எவ்வளவு ஆர்வமூட்டும் விஷயம் இது பாட்டி. திவ்ய ப்ரபந்தப் பாசுரங்கள் எதற்காக இயற்றப்பட்டது, பாட்டி?

ஆண்டாள் பாட்டி: திவ்யப்ரபந்தத்தின் பிரதான நோக்கமே எம்பெருமானுடைய கல்யாண குணங்கள், அதிலும் முக்கியமாக பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான் போன்ற அர்ச்சாவதார எம்பெருமான்களின் கல்யாண குணங்களை விரித்து உரைப்பது தான், .

வ்யாச: ஆனால், வேதம் தான் நமக்கு மிகவும் முக்கியம் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோமே பாட்டி. வேதத்திற்கும் திவ்ய ப்ரபந்தத்திற்கும் உள்ள சம்பந்தம்தான் என்ன?

ஆண்டாள் பாட்டி: பெருமாள் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரிக்கும்பொழுது வேதமே ஸ்ரீராமாயணமாக தோன்றியது என்றோர் விளக்கமுண்டு. அது போலவே, பெருமாள் அர்ச்சாவதார எம்பெருமானாக தோன்றும் பொழுது, வேதம் ஆழ்வார்களின் திருவாக்கில் திவ்யப்ரபந்தமாகத் தோன்றியது. நாம் இருக்கும் நிலையிலிருந்து பரமபதநாதனைப் பற்றி அறிந்து கொள்வது இயலாதது. எனவே, நாம் எளிதாக நம்முடைய இடத்திலிருந்தே அர்ச்சாவதரப் பெருமாளை அணுகுகிறோம். அதே போல வேதம்/வேதாந்தம் இவைகளை  அறிந்து கொள்வது கடினமானது.  ஆனால் அதே தத்துவங்கள் வெகு எளிதான வகையிலும் சுருக்கமாகவும் ஆழ்வார்களால் திவ்யப்ரபந்தமாக விளக்கப்பட்டுள்ளன.

வ்யாச: பாட்டி! அப்படியானால், வேதம் நமக்கு பிரதானமானது இல்லை என்று கொள்ளலாமா பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அப்படி இல்லை! வேதம், திவ்ய ப்ரபந்தம் ஆகிய இரண்டுமே நமக்கு சம அளவில் முக்கியமானது. பெருமாளைப் பற்றிய புரிதல் ஏற்படுவதற்கான அனைத்து அடிப்படைகளையும் கொண்டது என்பதால் வேதம் பிரதானமானது. ஆனால், பெருமாளுடைய மேன்மையான கல்யாண குணங்களைப் பற்றி அறிந்து மகிழ திவ்யப்ரபந்தம் உகந்தது. மேலும், வேதத்தில் விளக்கப்பட்டுள்ள நுட்பமான தத்துவங்களை, நம் பூர்வாசாரியர்கள் அருளிய திவ்யப்ரபந்தத்தின் விளக்கங்களின் மூலம் கற்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, அவரவருடைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வேதம், வேதாந்தம், திவ்யப்ரபந்தம் போன்றவற்றைக் கற்க வேண்டும்.

பராசர: திவ்யப்ரபந்தத்தின் முக்கிய நோக்கம் யாது பாட்டி?

ஆண்டாள் பாட்டி: சிறிது காலமே இருக்கக்கூடிய இன்ப/துன்ப விஷயங்களில் உள்ள நம்முடைய ஈடுபாட்டைக் களைந்து, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீமந்நாராயணனுக்கும் பரமபதத்தில் எல்லையற்ற இன்பமான, நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு நம்மை உய்வித்தலே திவ்யப்ரபந்தத்தின் முக்கிய நோக்காகும். ஸ்ரீமந்நாராயணனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்தலே நமக்கு இயற்கையாக உள்ள விதியாகும். ஆனால்,  உலக விஷயங்களில் ஈடுபாடு கொள்வதால், அந்த உயர்ந்த இன்பத்தை விட்டு நாம் விலகி விடுகிறோம். திவ்யப்ரபந்தம் பெருமாளுக்கு பரமபதத்தில் நித்ய கைங்கர்யங்கள் செய்வதன் மகத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

வ்யாச: ஆமாம் பாட்டி! இந்த தத்துவத்தைக் குறித்து முன்னேயே கூட நீங்கள் விளக்கியுள்ளதால், சற்றே புரிகிறார் போல் இருக்கிறது.

பராசர: நம் பூர்வாசார்யர்கள் எவர் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி கேட்டாய் பராசரா! நம்முடைய சம்பிரதாயத்தில் தோன்றிய பல ஆசார்யர்களைப் பற்றி இனிமேல் உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஆழ்வார்கள் சொற்படி இருந்து காட்டியவர்களாதலால், ஆசார்யர்கள் குறித்து அறிந்து கொண்டு அவ்வழியில் செல்வது நமக்கு மிகவும் அவசியமானதாகும்.

பராசரனும் வ்யாசனும்: நன்றி பாட்டி! நம் ஆசார்யர்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நாங்கள் ஆவலாகக் காத்திருப்போம்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/02/beginners-guide-dhivya-prabandham-the-most-valuable-gift-from-azhwars/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திவ்யப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு”

  1. excellent ,like this every one should be made aware of the things about the sri vaishnava culture please try to send to as many as you can, i will also send.

    adiyen thaasan
    Lakshminarasimhan
    M.COM, FCA,GR.CWA,MBA,M.PHIL,FIIMM,NCES.
    Chennai-47
    9710976571

    Reply

Leave a Comment