ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< திருப்பாணாழ்வார்

தம்முடைய குதிரையான ஆடல்மாவின் மேல் திருமங்கை ஆழ்வார்

ஆண்டாள் பாட்டி, பராசரன் வ்யாசன் மூவரும் உரையூரிலிருந்து இல்லத்திற்குத் திரும்புகிறார்கள்.

ஆண்டாள் பாட்டி: பராசரா, வ்யாசா, இருவரும் உரையூருக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தீர்களா?

பராசரனும் வ்யாசனும்: ஆமாம் பாட்டி. அங்கே சென்று திருப்பாணாழ்வாரைச் சேவித்தது மிக நன்றாக இருந்தது. எங்களுக்குத் திவ்ய தேசங்களுக்குச் சென்று அங்கே உள்ள அர்ச்சாவதார எம்பெருமான்களை சேவிப்பதில் விருப்பமாக இருக்கிறது.

ஆண்டாள் பாட்டி: இப்பொழுது உங்களுக்குப் பல திவ்ய தேசங்களின் சிறப்புகளை காட்டிக் கொடுத்தவரான திருமங்கை ஆழ்வாரைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அவர் திருநாங்கூர் என்னும் தேசத்திற்கு அருகிலுள்ள   திருக்குறையலூர் என்னும் ஊரில், கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில்  அவதரித்தார். அவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் 6 திவ்ய ப்ரபந்தங்களைப் பாடினார். அவருடைய இயற்பெயர் நீலன் (அவர் நீல நிறத்தவராய் இருந்ததனால்) என்பதாகும்.

பராசர: அந்நாட்களில் அவர் எவ்வாறு திவ்ய தேசங்களுக்குப் பயணம் செய்தார் பாட்டி?

ஆண்டாள் பாட்டி: அவரிடம் ஆடல்மா என்று  மிகவும் பலம் பொருந்திய ஒரு குதிரை ஒன்று இருந்தது; அதன் மேல் அவர் எங்கும் சென்று வந்தார்.

வ்யாச: அவருடைய சிறப்புகள் என்ன பாட்டி?

ஆண்டாள் பாட்டி: திருமங்கை ஆழ்வாருக்குத் தனியான பல சிறப்பம்சங்கள் உண்டு. முதலில், அவர் ஒரு சிறந்த வீரர்; ஒரு சிற்றரசை ஆண்டு வந்தார். அப்பொழுது  அவர் குமுதவல்லி நாச்சியாரைப் பார்த்து அவரை விவாஹம் செய்து கொள்ள விரும்பினார். குமுதவல்லி நாச்சியாரோ தாம் யார் ஒருவர் பெருமாளின் பக்தராகவும், பாகவதர்களுக்கு சிறந்த கவனத்துடனும்  அன்போடு கைங்கர்யங்கள் செய்பவராகவும் இருக்கிறாரோ, அவரையே விவாஹம் செய்ய விரும்பவதாக ஆழ்வாரிடம் கூறினார். ஆழ்வார் இதற்கு ஒப்புக்கொண்டு பெருமாளுடைய பக்தராக ஆக, இருவருக்கும் விவாஹம் நடந்தது. ஆழ்வார் பல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரசாதம் அளிக்கும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால், நாளடைவில் அவருடைய செல்வங்கள் இதில் கரைந்து போக, கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு இயலாமல் போகும் நிலை வந்தது. அதனால், அவர் அருகில் இருந்த காட்டுப் பாதை வழியாக செல்லும் செல்வந்தர்களிடமிருந்து  வழிப்பறி செய்து அந்தப் பொருளைக் கொண்டு பிறருக்கு கைங்கர்யங்களைத் தொடர்ந்தார்.

பராசர: அடடா! நாம் திருடலாமா பாட்டி?

ஆண்டாள் பாட்டி: இல்லை! நாம் ஒருகாலும் அவ்வாறு செய்யக் கூடாது. ஆனால், ஆழ்வாருக்கு பாகவதர்களுக்கு கைங்கர்யங்கள் செய்வதில் இருந்த பெருத்த ஆசையினால், அவர் செல்வந்தர்களிடம் களவாடத் தொடங்கினார். பெருமாளோ, அவரைத் திருத்தி ஞானத்தை ஊட்ட விரும்பினார். அதற்காக அவரும் தாயாரும் புதியதாக திருமணமான செல்வந்தர்கள் போல உருக்கொண்டு பல  உறவினர்கள் சூழ அக்காட்டு வழியே ப்ரயாணம் செய்தனர். செல்வம் ஈட்டும் பொருட்டு வந்த வாய்ப்பாகக் கருதி, ஆழ்வாரும் அவர்களிடம் களவாட முயன்றார். ஆனால் இறுதியில், பெருமாளுடைய அனுக்கிரஹத்தினால், அவர் அங்கு வந்திருப்பது பெருமாளே என்பதை உணர்ந்தார். பெருமாள் ஆழ்வாரை  முற்றிலும் திருத்திப் பூரணமாக அனுக்கிரஹித்தார். பெருமாளையே தம்மை திருத்திப் பணிகொள்ளும்படி செய்தவராகையால், பெருமாளே அவருக்கு மிகவும் மிடுக்கானவர் / மேன்மையானவர் என்று பொருள் படும் “கலியன்” என்ற பெயரைச் சூட்டினார்.  பரகாலன் என்றால் பரமாத்மாவே பயப்படுபவர் என்று பொருள்.

வ்யாச: ஆஹா! எவ்வளவு ஆச்சரியமான் நிகழ்ச்சி! அதன் பின்பு அவர் என்ன செய்தார்?

ஆண்டாள் பாட்டி: மிகவும் உணர்ச்சிவசப்படவராய், அவர் பெருமாளிடம் சரண் புகுந்தார். அதற்குப் பிறகு,  பரந்து விரிந்துள்ள  பாரத  தேசத்தில் பரவியுள்ள உள்ள 80க்கும் மேற்பட்ட பல திவ்ய தேசங்களுக்குப்  பயணம் செய்து அங்குள்ள பெருமாள்களுக்குப் பாடல்கள் பாடினார். அதுவும், வேறு எந்த ஆழ்வார்களாலும் பாடப்படாத 40 பெருமாள்களுக்கு இவர் மாத்திரமே பாசுரங்கள் பாடி அந்த திவ்ய தேசங்களை நமக்குக் காண்பித்துக் கொடுத்தார்.

பராசர: ஓ! நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் – அவரால்தானே நாம் இப்பொழுது அந்த திவ்ய தேசங்களை சேவிக்கிறோம் அதற்காக, அவரிடம்  நாம் எப்பொழுதும் நன்றியோடு இருக்க வேண்டும்.

ஆண்டாள் பாட்டி: நம்முடைய ஸ்ரீரங்கத்திலும் கூட அவர் மதில் சுவர்களை கட்டுவித்தது போன்ற பல கைங்கர்யங்களை செய்துள்ளார். அவர் ஆயுட்காலத்திலேயே, பெருமாள் ஆழ்வாருடைய மைத்துனரிடம் ஆழ்வாரைப் போன்ற விக்ரஹம் செய்து வழிபட்டு வருமாறு ஆணையிட்டிருந்தார். அதற்குச் சில காலத்திற்கு பின்பு, திருமங்கை ஆழ்வார் திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்திற்குச் சென்று, நம்பி எம்பெருமானைச் சிறிது  காலம் வழிபட்டு வந்தார். இறுதியில், எம்பெருமானையே தியானித்து, எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு பரமபதத்திற்கு ஏகினார்.

வ்யாச: ஆழ்வாருடைய சரித்திரத்திலிருந்து, நாங்கள், அர்ச்சாவதார பெருமாளுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் கைங்கர்யங்கள் செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டோம் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: ஆமாம், அதுவே நம்முடைய சம்பிரதாயத்தின் உட்கருத்தாகும். இத்துடன், நீங்கள், எல்லா ஆழ்வார்களைப் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். நான் அடுத்த முறை உங்களுக்கு ஆசாரியர்களைப் பற்றி சொல்லப் போகிறேன்.

பராசரனும் வ்யாசனும்: சரி பாட்டி. நாங்கள் அதை அறிய ஆவலாக உள்ளோம்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/02/beginners-guide-thirumangai-azhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment