ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருப்பாணாழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< தொண்டரடிப்பொடி ஆழ்வார்

பெரிய பெருமாள்திருப்பணாழ்வார்

ஆண்டாள் பாட்டி வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண் விழித்து உபவாசம் இருக்க எண்ண, பராசரனும் வ்யாசனும் தாமும் கண் விழித்திருக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள்.

ஆண்டாள் பாட்டி : இன்று போன்ற சிறப்பான நன்னாளில் விழித்திருப்பது மாத்திரம் போதாது. நாம் பெருமாளைப் பற்றிப் பேசியும் அவருக்கு கைங்கர்யங்கள் செய்வதிலும் ஈடுபட வேண்டும்.

பராசர: பாட்டி, நாம் கண் விழித்திருக்கும் பொழுது, எங்களுக்கு அடுத்த ஆழ்வாரைப் பற்றி சொல்கிறீர்களா?

ஆண்டாள் பாட்டி :  நான் நினைத்ததையே நீயும் கேட்டாய் பராசரா! சரி, இப்பொழுது உங்களுக்குத் திருப்பாணாழ்வாரைப் பற்றிச் சொல்கிறேன்.

பராசரனும் வ்யாசனும்: சொல்லுங்கள்  பாட்டி.

ஆண்டாள் பாட்டி: திருப்பாணாழ்வார், ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உறையூரில் கார்த்திகை மாதம் ரோஹினி நக்ஷத்திரத்தில் அவதரித்தார். அவர் ஸ்ரீரங்கநாதனின் அழகை அமலனாதிபிரான் என்ற 10 பாசுரங்களால் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்துப் பாடினார்.

வ்யாச: ஆமாம் பாட்டி, நம்முடைய பெருமாளை யார் கண்டாலும் அவர் அழகில் முழுமையாக ஈடுபட்டு மெய்மறந்து விடுவார்கள்.

ஆண்டாள் பாட்டி. ஆமாம் கண்ணா! அவர் பெரிய பெருமாளுக்கு மிகவும் பிரியமான பக்தர், ஒரு சுவையான சம்பவம் அவரை திடீரென பரமபதத்தை அடையும்படி செய்தது.

பராசர: அந்த சம்பவத்தைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன் பாட்டி.

ஆண்டாள் பாட்டி: ஒரு நாள் அவர், காவிரிக்கரையில் பெருமாளுடைய மேன்மைகளைப் பாடிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். அது வரையில் அவர் ஸ்ரீரங்கத்தில் பிரவேசித்ததே இல்லை. பெருமாளுடைய் கைங்கர்யபரர்களில் ஒருவரான லோக சாரங்க முனி அப்பொழுது கைங்கர்யத்திற்காக நதியிலிருந்து தீர்த்தம் எடுக்க அங்கே சென்றார். அந்த வழியில் ஆழ்வரைக் கண்டார். தீர்த்தம் எடுக்கும் பொருட்டு ஆழ்வாரைத் நகர்ந்து கொள்ளும்படி சொன்னார். ஆனால் ஆழ்வார் பெரிய பெருமாளைக் குறித்து ஆழ்ந்த தியானத்தில்  ஈடுபட்டிருந்தாராகையால் அவர் நகர்ந்து கொள்ளவில்லை.

வ்யாச: அடுத்து என்ன நடந்தது பாட்டி?

ஆண்டாள் பாட்டி: லோக சாரங்க முனி ஒரு சிறு கல்லைப் பொறுக்கி ஆழ்வாரின் மீது வீசினார். ஆழ்வாருக்கு காயம் ஏற்பட்டு அவர் மேல் ரத்தம் கொட்ட தொடங்கியது. ஆழ்வார் தன்னுடைய தியானத்திலிருந்து விழித்துத் தாம் அந்த பாதையில் இருப்பதை உணர்ந்தார்.

பராசர: அவருக்கு லோக சாரங்க முனியின் மீது கோபம் ஏற்பட்டதா?

ஆண்டாள் பாட்டி: இல்லை கண்ணா! ஸ்ரீவைஷ்ணவர்கள், இது போன்ற சிறு விஷயங்களுக்கு எப்பொழுதுமே கோபம் கொள்ள மாட்டார்கள். உடனே ஆழ்வார் தாம் அவருடைய வழியில் நின்றமைக்காக மன்னிப்புக் கோரிவிட்டு நகர்ந்து சென்று விட்டார். லோக சாரங்க முனி கோயிலுக்குச் செல்ல, பெரிய பெருமாளோ அவர் காரணமின்றி ஆழ்வாரின் மீது துவேஷத்துடன் நடந்தமைக்காக அவர் மீது அதிருப்தி கொண்டிருந்தார்! அவர் தம்முடைய கதவுகளை திறக்க மறுத்து, லோக சாரங்க முனியை உடனே சென்று ஆழ்வாரிடம் மன்னிப்புக் கோரி, அவரை கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். லோக சாரங்க முனி தாம் செய்த பெரும் அபசாரத்தை உணர்ந்து ஆழ்வாரிடம் ஓடிச் சென்றார். தம்மை மன்னிக்குமாறு ஆழ்வாரிடம் கோரினார். ஆழ்வாரோ அவர் மீது எந்த காழ்ப்பும் கொள்ளாதவராகையால், அவருடைய மன்னிப்பைக் கருணையுடனும் தாழ்மையுடனும் ஏற்றுக்கொண்டார்.

வ்யாச: அவர் எத்தகைய முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் பாட்டி. நாங்களும் அவரைப் போன்றே பெருந்தன்மையுடன் இருக்க முயற்சி செய்வோம்.

ஆண்டாள் பாட்டி: லோக சாரங்க முனி திரும்பவும் வருந்தி அழைக்க,  ஆழ்வாரும் லோக சாரங்க முனியின் தோள்களின் மீது ஏறி, வழி நெடுக அமலனாதிபிரான் பாடிய வண்ணம் பெரிய பெருமாளுடைய சன்னிதியை   வந்தடைந்து கடைசிப் பாசுரத்தில் “என் அமுதினைக் (பெரிய பெருமாள்) கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று பாடி, பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளில் மறைந்து நித்ய கைங்கர்யங்களில் ஈடுபடும் பொருட்டு பரமபதத்தை அடைந்தார்.

பராசர: என்ன விந்தை பாட்டி! இதுகாறும் நாங்கள் கேட்ட ஆழ்வார்களின் கதைகளில், இதுவே சிறந்தது!

ஆண்டாள் பாட்டி: ஆமாம்! திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளின் அலாதியான பக்தர். நாமும்கூட இன்று உறையூருக்குச் சென்று அவரைச் சேவித்து விட்டு வருவோம்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2015/01/beginners-guide-thiruppanazhwar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment