ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1

திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி மற்றும் மாறனேர் நம்பி

tirukkachinambi

பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களின் நண்பர்களான வேதவல்லி, அத்துழாய் மற்றும் ஸ்ரீவத்ஸாங்கனும் அவர்களுடன் வருகிறார்கள்.

பாட்டி (புன்முறுவலுடன்) : உள்ளே வாருங்கள் குழந்தைகளே. வ்யாசா, நான் நேற்றுச் சொன்னது போலவே, நீ உன்னுடைய எல்லா நண்பர்களையும்  அழைத்து வந்து விட்டாயே!

வ்யாஸ : ஆமாம் பாட்டி, நானும் பராசரனும் ஸ்ரீவத்ஸாங்கனுக்கு, ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்களைப் பற்றிய கதைகளைச் சொன்னோம். அவனும் மேலும் கதைகளை உங்களிடம் கேட்க விரும்பி எங்களுடன் இன்று வந்து விட்டான்.

பாட்டி : நல்லது. வா, உட்கார். இன்று நான், நம் சம்பிரதாயத்தில் மிகச் சிறந்த இரண்டு ஆசார்யர்களான திருக்கச்சி நம்பியைப் பற்றியும் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் சொல்கிறேன்.

ஸ்ரீவத்ஸாங்கன் : பாட்டி, திருக்கச்சி நம்பி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியிலுள்ள பூவிருந்தவல்லி என்னும் இடத்தில் அவதரித்தவர். அந்தக் கோயிலுக்கு நாங்கள் போன வருடம் கோடை விடுமுறையில் சென்றிருந்தோம்.

பாட்டி: மிகச்சரி. அவர் தேவப்பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கர்யம் செய்து வந்தவர். பெருமாளுடன் உரையாடும் பேறு பெற்றவர். அவர் தேவப்பெருமாளுடைய அன்பிற்கும்  நெருக்கத்திற்கும் பாத்திரமானவர். ராமானுஜர் காஞ்சிபுரத்திற்கு வந்த பொழுது திருக்கச்சி நம்பி தான் அவருக்கு முதல் ஆசார்யராக இருந்து தம் சிஷ்யராக ஏற்று, ராமானுஜரை எம்பெருமானுக்குத் தொண் டு செய்வதில் முதலில் ஈடுபடுத்தி அருளியவர்.

வ்யாஸ: ராமானுஜர் என்ன கைங்கர்யம் செய்தார் பாட்டி?

பாட்டி : தமக்கு நல்வழி காட்டும்படி ராமானுஜர் கோர, திருக்கச்சி நம்பி ராமானுஜரை அருகிலிருந்த சாலைக்கிணறு  என்னும் கிணற்றிலிருந்து பெருமாளுடைய திருமஞ்சனத்திற்கான நீரைக் கொண்டு வரும் கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு கூறினார். இதைத்தான் முதல் கைங்கர்யமாக ராமானுஜருக்கு திருக்கச்சி நம்பிகள் காட்டிக்கொடுத்தார். அவருக்கு சாஸ்திரங்களில் இருந்த ஞானத்திற்கும் எம்பெருமானிடத்திலிருந்த அன்பிற்கும்  நிகரே இல்லை. ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளிடத்தில் மிகுந்த அன்பும் பணிவும் கொண்டவராக தம்மை அவரின் சிஷ்யராக ஏற்று தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்விக்கும்படி வேண்டினார்.

பராசர : ஆனால் பாட்டி, பெரிய நம்பி ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார் என்று எங்களுக்கு நீங்கள் சொன்னீர்களே ?

பாட்டி : ஆமாம் பராசரா . நீ அதை நன்கு நினைவில் வைத்திருப்பது நல்லது. சாஸ்திரங்களை நன்கு அறிந்த அறிஞரான திருக்கச்சி நம்பி, சாஸ்திரங்களில் கூறியிருந்த சில நியதிகளின்படி  ராமானுஜருக்குத் தம்மால் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்க இயலாது என்று அறிந்திருந்தார். அதை அவர் ராமானுஜருக்கு விளக்க, சாஸ்திரங்களின் கூறியிருந்தபடியால் ராமானுஜரும் அதனை ஏற்றுக்கொண்டார். இதைக் கொண்டே ராமானுஜர் நம் சம்பிரதாயத்தின் தர்மத்தின் மீதும் புனிதத்தன்மையின் மீதும் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அறிந்து கொள்ளலாம். நம்முடைய ஆசார்யர்கள் போலவே அவரும் நம் சாஸ்திரங்களில் சொல்லியிருந்தால் அதில் சந்தேகம் ஏதும் கொள்ளாமல் எக்கேள்வியும் இன்றி பகவானுடைய வாக்கும் ஆணையும் அதுவே என்று நம்பினார். ராமானுஜருக்கு நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கும்  கேள்விகளுக்கும் திருக்கச்சி நம்பி தீர்த்து வைத்து நல்வழி காட்டினார். திருக்கச்சி நம்பி ராமானுஜரின் சந்தேகத்தை நிவர்த்திக்கும் பொருட்டு தேவப்பெருமாளுடன் உரையாடியது குறித்து வெகு சுவையான ஒரு கதை உண்டு .

வேதவல்லி : அந்த சந்தேகங்கள் என்ன ? தேவப் பெருமாள் என்னதான் பாட்டி கூறினார்?

பாட்டி : ஒரு முறை ராமானுஜரின் உள்ளத்தில் சில குழப்பங்கள் எழுந்தன. அவர் திருக்கச்சி நம்பி தேவப்பெருமாளுடன் உரையாடக் கூடியவர்  என்பதால் நம்பியை நாடினார். நம்பியும் எம்பெருமானிடம் சென்று கைங்கர்யங்கள் செய்து ராமானுஜரின் கோரிக்கைகளை எழுப்ப,  தக்க தருணம் பார்த்திருந்தார். தேவப்பெருமாளும் நம்பியின் தயக்கத்திற்கான காரணம் என்னவென்று  கேட்டார். நம்பி ராமானுஜருக்கு இருந்த தெளிவுபடுத்தவேண்டிய  சில சந்தேகங்கள் இருப்பதாக கூற, தேவப்பெருமாள் அந்தர்யாமியாகையால் , பரிவோடு கூறினார் – ”ராமானுஜரிடம் கூறவும் 1) அனைத்திலும் உயர்ந்த பரமாத்மா நானே, ஐயமில்லை 2) அனைத்து உயிரினங்களிலும் உயிரற்றவையிலும் அந்தர்யாமியாக இருப்பவன் நானே அவை எனக்கு நிகரன்று. அவை என்னிலிருந்து மாறுபட்டவை மட்டுமின்றி எனக்கு அடிமைப்பட்டவை  3) என்னை மாத்திரமே சரணாக பற்றுவதால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ளவும் என்னை வந்தடையவும் இயலும்.    4) என்னை சரணடைந்த என் பக்தர்களை நான் தவறாது நினைவில் கொண்டு அவர்களுடைய அந்திமக் காலத்தில் ரக்ஷிப்பேன். 5) என்னுடைய  பக்தர்கள் இவ்வுலகை விட்ட பின், அவர்களுக்கு என்னுடைய உறைவிடமான ஸ்ரீவைகுண்டத்தில்  நித்ய கைங்கர்யங்களைச் செய்யும் வண்ணம் அருள்வேன்; இறுதியாக 6)  பெரிய நம்பியை ஆசார்யனாகக் கொள்ளவும்”. ராமானுஜருக்கு எழுந்த ஐயங்கள் என்னவென்று தேவப்பெருமாளும் கேட்கவில்லை, நம்பியுமே அந்த ஐயங்கள் என்னவென்பதை அறிந்தவரல்ல. நம்பி ராமானுஜருக்கு இந்த விடைகளைச் சொல்ல, ராமானுஜர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. தேவப்பெருமாளின் கருணைக்கு எல்லையேது. ராமானுஜருக்கு எப்பொழுது சந்தேகங்களோ  சஞ்சலங்களோ எழுந்தாலும் தேவப்பெருமாள் அவருக்கு எப்பொழுதும் தெளிவு கொடுத்தவர். தாம் ஸமாச்ரயணம் பெற்றுக்கொள்ள பெரிய நம்பியை அணுக வேண்டும் என்ற தெளிவு ராமானுஜருக்கு இப்பொழுது ஏற்பட்டு விட்டதனால், அவர் திருக்கச்சி நம்பியிடமிருந்து ஆசி பெற்றுக்கொண்டு பெரிய நம்பியைக் காண ஸ்ரீரங்கத்திற்க்கு புறப்பட்டார்; அதற்குப் பின்னால் நடந்ததை நாம் அறிவோம் இல்லையா குழந்தைகளே?

வ்யாச : ஆமாம் பாட்டி, எங்களுக்கு நினைவிருக்கிறது.

பாட்டி : நம் சம்பிரதாயத்தில் பிற ஸ்ரீவைஷ்ணவர்கள் முன்பு ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு இருக்க வேண்டிய மிக இன்றியமையாத குணம் எளிமை, இதனை நைச்ய பாவம் என்றும் அடிக்கடி வழங்குவர். பெரிய நம்பி வாய்ச்சொல் அளவில் இல்லாமல் தமது உள்ளப்பூர்வமான எளிமைக் குணத்தினால், எளிமைக்கு நடமாடும் உதாரணமாக விளங்கியவர். பெரிய நம்பி மிக எளிமையாக விளங்கி பிற ஸ்ரீவைஷ்ணவர்களுடன் மிகுந்த மரியாதையுடன் நடத்தியவர். ஒரு சுவையான சம்பவத்தினால் இதனை விளங்கிக் கொள்ளலாம். பெரிய நம்பியைப் போலவே ஆளவந்தாருக்கு மற்றொரு சீடராக மாறனேர் நம்பி என்னும் ஒரு உயர்ந்த ஆசார்யர் அக்காலத்தில் இருந்தார். மாறனேர் நம்பிக்கு தமது அந்திமக் கைங்கர்யங்களை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் செய்ய வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது; அவர் பெரிய நம்பி அதனை நிறைவேற்ற வேண்டும்  என்று கோரினார். இதற்குப் பெரிய நம்பி உகப்போடு ஒப்புக் கொண்டார்; அதனால் ஒரு கீழ்க்குலத்தில் பிறந்தவருக்கு அந்திமக் கைங்கர்யங்களை செய்து சாஸ்திரத்திற்குப்  புறம்பாக நடந்ததனால் அவ்வூரிலிருந்த பிற மக்களின் கோபத்திற்கு உள்ளானார். இதற்குப் பெரிய நம்பி சொன்ன விளக்கம் என்னவென்றால் பாகவத கைங்கர்யத்தை மிகுந்த சுத்தியுடனும் பணிவுடனும் செய்ய வேண்டும் என்று நம்மாழ்வாரின் உபதேசத்தின் படியே தாம் இதனைச் செய்தார் என்பதே. பாகவதர்களை, அவருடைய  குலத்தையோ பிறப்பையோ பாராமல், அவரிடம் மிகுந்த பணிவுடன் நாம் நடக்க வேண்டும். இவ்வாறான நைச்ய பாவத்தைக் கொள்கையளவில் அல்லாமல், தம் வாழ்க்கையில் அதன் படியே இருந்தவர் பெரிய நம்பி. எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானுக்கு பிரியமானவர்களாகையால் அவர்களை மிகுந்த பணிவோடு கொண்டாட வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும், பெரிய நம்பி, ஒரு உண்மையான பக்தனின் அந்திமக் காலத்தில் உள்ள இடமும் நிலையும் எவ்வாறாக இருந்தாலும், எம்பெருமான் அந்த பக்தருக்கு ஸ்ரீவைகுண்டத்தில் அந்தமில் பேரின்பமான கைங்கர்யத்தை அருளுவார் என்று திருக்கச்சி நம்பிக்கு தேவப்பெருமாள் அருளினார் அல்லவா அதனையும் ஆழ்ந்த்து நம்பினார்; இவர் இருந்த காலத்தில் தம் ஆசார்யரான ஆளவந்தாரின்  உபதேசப் படியும் நம்மாழ்வாரின் உபதேசங்களின் படியும் இருந்தவர். இன்றைக்கு இது போதுமா அல்லது மேலே திருக்கோஷ்டியூர் நம்பி பற்றிச் சொல்லட்டுமா?

azhwar-acharyas-ramanuja

வேதவல்லி : அவரைப் பற்றியும் கதைகள் உங்களிடம் உண்டா?

பாட்டி : ஆமாம், நிறைய உண்டு!

அத்துழாய் : அப்படியானால் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : திருக்கோஷ்டியூர் நம்பியும் ஆளவந்தாருடைய பிரதம சிஷ்யர்களில் ஒருவர்; அவருக்கு திருமந்த்ரம் மற்றும் சரம ச்லோகத்தின் பொருளை உபதேசிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவை என்னவென்று அறிவீர்களா?

வ்யாச : ஓம் நமோ நாராயணாய என்பது தான் திருமந்த்ரம்.

ஸ்ரீவத்ஸாங்கன் : ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ; அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: என்பதுதான் சரம ஸ்லோகம் .

பாட்டி : மிக நல்லது. இந்த மூன்று வாசகங்களுக்கும் மிக ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளன; அவற்றை ஆசார்யரிடம் இருந்து உபதேசமாக பெற்றறிய வெண்டும்.

வேதவல்லி : ஆனால் பாட்டி, நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் இவ்வாசகங்களின் பொருள் தெரிந்துள்ளதே.

பாட்டி: ஆம், நம்மில் பலரும் இவற்றின் பொதுவான கருத்தினை அறிந்து கொண்டிருக்கிறோம் ஆனாலும், இவை ஒவ்வொன்றிலும் பொதிந்துள்ள நம் சம்பிரதாயத்தின் ஆழ்ந்த கருத்துக்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை; அவற்றை ஒரு ஆசார்யனின் அருளின்றியோ வழிகாட்டுதலின்றியோ முழுவதுமாக அறிந்து கொள்ள இயலாது. ஆகையினால்தான் திருக்கோஷ்டியூர் நம்பிக்கு ராமானுஜருக்கு இக்கருத்துக்களை உபதேசிக்கும் முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

அத்துழாய் : பாட்டி, ராமானுஜர் திருக்கோஷ்டியுர் நம்பியிடம் உபதேசம் பெற 18 முறைகள் சென்றார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே. அது உண்மையா? அவர் ஏன் அத்தனை சிரமத்திற்கு உள்ளானார்?

பாட்டி : ஆமாம், அது உண்மைதான். ஒருபுறம் இதனை ராமானுஜரின் நம் சம்பிரதாயத்தில் இருந்த ஊக்கத்தையும் ச்ரத்தையையும் அறிய திருக்கோஷ்டியூர் நம்பி செய்த சோதனை என்று கொள்ளலாம்; மறுபுறம் இது ராமானுஜரின் விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் சான்றாகவும் கொள்ளலாம். நாம் சிரமங்களுக்கு உள்ளாகும்பொழுது, அதனை நாம் பொறுமையோடு எதிர்கொண்டு விடாமுயற்சியோடு அந்த தடைகளைத்தாண்ட வேண்டும். ராமானுஜர் எத்தனை முறை திருக்கோஷ்டியுர் நம்பியினிடம் சென்றார் என்று பாருங்கள், 18 முறைகள்! அவர் உறுதியுடன் இருந்து, இறுதியில், 18ஆவது முறைதான் அவர் சரம ச்லோகத்தின் செறிந்த கருத்துக்களை திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் உபதேசமாக பெற்றார்.

வ்யாச : பாட்டி, திருக்கோஷ்டியூர் நம்பி கண்டிப்பான ஆசார்யராக இருந்தார் போலிருக்கிறதே. அவர் ராமானுஜரிடத்தில் சற்று கருணையோடு இருந்திருக்கலாம்.

பாட்டி : மேம்போக்காக இச்சம்பவத்தைப் பார்த்தால் நம் எல்லாருக்கும் இதே தவறான புரிதலே ஏற்படும்.  ஆனால் அது உண்மையல்ல. அவர் பார்ப்பதற்கு ராமானுஜரிடத்தில் மிகவும் கடுமையாக இருந்தார்போல் இருந்தாலும், அவரிடத்தில் மிகவும் உள்ளன்பும் கனிவும் கொண்டு அவருடைய நன்மையை நோக்கமாகக் கொண்டிருந்தார். மிகவும் முதிய ஒரு தந்தை தம் மகனிடத்தில் கண்டிப்புடன் இருப்பது போல் தோன்றினாலும் மகனுடைய நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யும்  தந்தையைப் போன்றவர் அவர். நான் நேற்று திருமாலையாண்டனைப் பற்றி கூறுகையில், உங்களிடம் ஆண்டானுக்கும் ராமானுஜருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று சொன்னேனே நினைவிருக்கிறதா? ராமானுஜரின் பொருட்டு அவ்விருவரின் கருத்து வேறுபாடுகளையும்  சுமூகமாக களைந்தவர் திருக்கோஷ்டியூர் நம்பியாவார். உண்மையில், ராமானுஜர் பிற ஸ்ரீவைஷ்ணவர்கள் மீது கொண்டிருந்த தன்னலமற்ற அன்பினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு எம்பெருமானார் (எம்பெருமானைக் காட்டிலுமே உயர்ந்தவர்) என்று ராமானுஜரை  அன்புடன் அழைத்தவர் திருக்கோஷ்டியூர் நம்பியே. இவ்வாறாகத்தான்  ராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்ற அழகிய திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்தில் சில விஷமிகள் ராமானுஜருடைய உணவில் விஷம் கலந்தபொழுது, தக்க சமயத்தில் அங்கே வந்து ராமானுஜரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவருக்கு உணவு தயாரிக்கும் பொறுப்பைக் கிடாம்பியாச்சானிடம் ஏற்படுத்தியவரும் திருக்கோஷ்டியூர் நம்பிதாம்.  அன்பு நிறைந்த ஒரு தந்தை தன் மகனுடைய  நன்மையை எவ்வாறு   கருத்தாகக் கொள்வாரோ அதே போல் திருக்கோஷ்டியூர் நம்பியும் ராமானுஜருடைய நன்மையை நோக்காகக் கொண்டிருந்தார். அவருடைய மேன்மையைப் பற்றியும், அளவற்ற ஞானத்தைப் பற்றியும் அவருடைய ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும் பலப் பல கதைகள் உண்டு. அக்கதைகளை உங்களுக்கு சொல்ல எனக்கு மிகவும் விருப்பமே. அவற்றைக் கேட்டுக்கொண்டேயிருக்க உங்களுக்கு ஆவல் இருந்தாலும், நேரம்  கடந்தால் உங்கள் பெற்றோர் கவலை கொள்வார்கள் என்பது நினைவிருக்கிறதா? இப்பொழுது இப்பழங்களை பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள். அடுத்த முறை நான் இது போல நம் ஆசார்யர்களைப் பற்றி மேலும் பல கதைகளைச் சொல்கிறேன்.

குழந்தைகள், பழங்களைப் பகிர்ந்து கொண்டு திருக்கச்சி நம்பியைப் பற்றியும், மாறனேர் நம்பியைப் பற்றியும் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பற்றியும் எண்ணியவாறு தங்கள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார்கள்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-alavandhars-sishyas-2/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment