ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< நஞ்சீயர்

பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்றைக்கு நாம் அடுத்த ஆசார்யரும் நஞ்சீயரின் சிஷ்யருமான நம்பிள்ளையைப் பற்றிப் பேசப்போகிறோம். நான் உங்களுக்கு முன்பே சொன்னது போல், நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் புலமைப் பெற்றவராக இருந்தவர் நம்பிள்ளை. நஞ்சீயரின் 9000 படி வ்யக்யானத்தின் பிரதிகளை எடுப்பதற்காக வரதராஜரின் பெயர் பரிந்துரைக்கப் பட்டது என்று அறிந்தோம் அல்லவா? நஞ்சீயர் தாம் வரதராஜரின் பெருமைகளை அறிந்து அவருக்கு நம்பிள்ளை என்ற பெயரிட்டர். திருக்கலிக்கன்றி தாசர், கலிவைரி தாசர், லோகாசார்யர், ஸூக்தி மஹார்னவர், ஜகதாசார்யர், உலகாசிரியர் என்றெல்லாம் பெயர்கள் அவருக்கு உண்டு.

நம்பிள்ளை – திருவல்லிக்கேணி

வ்யாசன்: பாட்டி, நம்பிள்ளை எவ்வாறு தம் ஆசார்யரின் 9000 படி மூல வ்யாக்யானத்தை காவேரி வெள்ளத்தில் தொலைத்த பிறகு தனது நினைவிலிருந்து எழுதினார் என்று ஞாபகம் இருக்கிறது.

பாட்டி: ஆமாம், அத்தனை பெருமையும் ஞானமும் இருந்தும், நம்பிள்ளை மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். அனைவரையும் மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார்.

வேதவல்லி: பாட்டி, நம்பிள்ளையின் பெருமைகளை எடுத்துரைக்கும் சில நிகழ்வுகளை சொல்ல முடியுமா?

பாட்டி: ஆழ்வார்களின் பாசுரங்களை அர்த்தங்களுடன் கற்றறிந்த பிறகு, நம்பிள்ளை ஸ்ரீரங்கம் கோயிலிலே பெரிய பெருமாள் ஸந்நிதிக்குக் கிழக்கு திசையில் அமர்ந்து உபன்யாஸங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நம்பிள்ளை தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் நல்ல புலமை பெற்றிருந்ததால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கேட்கலாயினர். வால்மீகி ராமாயணத்தைக் கொண்டு மக்களின் மனங்களிலிருந்த அனைத்து ஸந்தேஹங்களையும் தீர்ப்பதில் வல்லாவராயிருந்தார். ஒரு முறை நம்பிள்ளை உபன்யாஸம் செய்து கொண்டிருந்த பொழுது, பெரிய பெருமாள் (ஸ்ரீரங்கத்தில் மூலவராக எழுந்தருளியிருப்பவர்) தனது ஸயனத் திருக்கோலத்திலிருந்து எழுந்து நின்று பார்க்க முற்பட்டார். திருவிளக்குப் பிச்சன் (ஸன்னிதியில் விளக்கெரிக்கும் கைங்கர்யத்தைச் செய்பவர்) அவரைப் பார்த்து, அசைவது அர்ச்சாவதாரத்துக்கு ஏற்காது என்று அவரை ஸயனத் திருக்கோலத்திற்குத் திரும்பச் சொன்னார். எம்பெருமான் தனது அர்ச்சா ஸமாதியையும் (பேசுவதோ அசைவதோ செய்ய மாட்டேன் என்ற உறுதி பூண்ட நிலை) கலைத்து நம்பிள்ளையின் உபன்யாஸங்களைப் பார்க்கவும்  கேட்கவும் ஆசைகொண்டார் என்றால் நம்பிள்ளையின் உபன்யாஸங்கள் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்று அறிந்து கொள்ளலாம். தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் இருந்தமையால் கேட்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும் திறன் படைத்தவராக இருந்தார், நம்பிள்ளை.  நம்பெருமாள் எவ்வாறு உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களைத் தன் அழகிய திருமேனியாலும், நடையழகாலும் தன் புறப்பாட்டிற்கு வரும்படிக் கவர்ந்து இழுத்தாரோ, அவ்வாறே நம்பிள்ளையும் கவரும் ஆற்றல் படைத்தவராக இருந்தார். யாரேனும் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளின் புறப்பாட்டைப் பார்த்து இருக்கிறீர்களா?

ஸ்ரீரங்கத்து பெருமாள் ஸன்னிதியில் நம்பிள்ளையின் உபன்யாசம்

அத்துழாய்: ஆமாம் பாட்டி, பார்த்திருக்கிறேன். நான் ஒரு ப்ரஹ்மோத்ஸவத்தின் போது ஸ்ரீரங்கத்திற்குப் போயிருந்தேன்; அப்பொழுது பெருமாளுடைய வீதி புறப்பாடு நடந்து கொண்டிருந்தது. அவர் நடந்த விதம் வசீகரிக்கும் விதமாக இருந்தது.

பராசரன்: ஆமாம் பாட்டி, நாங்களும் நம்பெருமாளின் புறப்பாட்டைப் பல தடவை பார்த்திருக்கிறோம்.

பாட்டி: யார் தான் பார்த்திருக்க மாட்டார்கள். நம் பார்வைக்கு விருந்தல்லவா அது? நம்பெருமாள் எவ்வாறு தன் அடியார்களை எல்லாம் தன் புறப்பாட்டாலே ஈர்த்தானோ, நம்பிள்ளையும் தனது உபன்யாஸத்திற்கு பெரிய கூட்டத்தை கூட்டக்கூடியவர். நம்பெருமாளுக்கு முன் ஒரு முறை, நம்பிள்ளையை நோக்கி, கந்தாடை தோழப்பர் (முதலியாண்டான் பரம்பரையிலே வந்தவர்) சில கடும் வார்த்தைகளைச் சொல்லி விடுகிறார். அவரது மனதிற்கு நம்பிள்ளையின் மேன்மைகள் புலப்படாததன் எதிரொலியாய் அவரது கடும் வார்த்தைகள் இருந்தன. நம்பிள்ளை ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், அந்த அவமரியாதையை ஏற்று, கோயிலை விட்டுத் தன் திருமாளிகைக்கு சென்றார். தோழப்பர் தன் திருமாளிகைக்கு திரும்பச் சென்ற பொழுது அவரது மனைவி அவரது செயலை கண்டித்து, நம்பிள்ளையின் மேன்மைகளை எடுத்துரைத்தார். தோழப்பரின் மனைவியார் அவரை நம்பிள்ளையின் திருவடித்தாமரைகளில் மன்னிப்பு வேண்டுமாறு வலியுறுத்துகிறார். தோழப்பரும் தனது தவறை உணர்ந்து நம்பிள்ளையின் திருமாளிகைக்கு நள்ளிரவில் செல்ல எண்ணினார். வாசற்கதவை திறக்க முற்படும் பொழுது, அங்கு நம்பிள்ளை காத்திருப்பதை கண்டார். தோழப்பரைக் கண்டவுடன் நம்பிள்ளை அவருக்கு தண்டன் ஸமர்ப்பித்து தான் ஏதோ தவறு செய்ததாகவும் அதனால் தான் தோழப்பர் அவர் மீது கோபம் கொண்டதாகவும் கூறினார். தோழப்பரே தவறு செய்தபொழுதிலும் தான் தவறு செய்தது போல் அதனைத் தன் மேலிட்டுக்கொண்ட  நம்பிள்ளையின் பெருந்தன்மையை கண்டு வியந்தார் தோழப்பர். நம்பிள்ளையை விழுந்து சேவித்த தோழப்பர் நம்பிள்ளையின் மிகுந்த தன்னடக்கதினால் அன்றிலிருந்து “லோகாசார்யர்” (இந்த உலகத்திற்கே ஆசிரியர்) என்று அழைக்கப்படுவார் என்று அறிவித்தார். இவ்வளவு ஆற்றல் பெற்றிருந்தும் அடக்கத்துடன் இருப்பவரையே “லோகாசார்யர்” என்றழைக்க இயலும் – நம்பிள்ளை அந்தப் பெயருக்கு மிகவும் பொருத்தமானவரே என்றும் கூறினார். தோழப்பர் நம்பிள்ளையின் மீதிருந்த வெறுப்பை விடுத்து தனது மனைவியுடன் நம்பிள்ளைக்கு கைங்கர்யம் செய்யலானார். அவரிடமிருந்து அனைத்து சாஸ்த்ரார்த்தங்களையும் கற்கலானார். 

பராசரன்: அருமை! இந்த நிகழ்வு பராசர பட்டர் தன்னைப் பற்றிக் குறை கூறியவருக்கு ஒரு விலை உயர்ந்த சால்வையைக் கொடுத்த கதையைப் போல இருக்கிறதல்லவா?

பாட்டி:  நன்றாக கவனித்துள்ளாய் பராசரா! நம் பூர்வாசார்யர்களுக்கெல்லாம் ஒத்த குணங்களே இருந்தன – ஒரு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனைப் போலே. காலம் காலமாக நாம் வாழவேண்டிய முறையைப் பற்றியும் பிறரிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் ஒரு தூய ஸ்ரீவைஷ்ணவனாக இருந்து காட்டியவர்கள் நம் ஆசார்யர்கள். சிறந்த உதாரணங்களாகத் திகழ்ந்து  நமக்கு நல்ல வழிகாட்டிச் சென்றார்கள். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமே வெறும் ஏட்டுச்சுரைக்காய் அன்று என தெளிவுபடுத்தியவர்கள். ஆசார்யன் அனுக்ரஹமும் நமது சிறு முயற்சியும் இருந்தால் நம் பூர்வாசார்யர்களைப்போல் வாழ முனையலாம்.  குழந்தையைப் போல் சின்ன சின்ன அடிகள் எடுத்து வைத்தாலே நமது இலக்கை அடைந்து விடலாம்.

பட்டர் எப்படி ஒரு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனாக இருக்க முடியும் என்று காட்டிய போதிலும், அவரது வம்சத்தில் வந்த நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், நம்பிள்ளை மீது பொறாமை கொண்டவராய் இருந்தார். ஒரு முறை நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் பின்பழகியராம் பெருமாள் ஜீயருடன் ராஜசபைக்கு சென்றார். ராஜா இருவரையும் அழைத்து, ஸம்பாவனை கொடுத்து உயர்ந்த ஆசனங்களைக் கொடுத்தான். ராஜா பட்டரிடம் ஸ்ரீராமாயணத்திலிருந்து ஒரு கேள்வி கேட்டார். ராமாவதாரத்தில், ஸ்ரீராமன் தன் பரமாத்ம ஸ்வரூபத்தை மறைத்துத் தன்னை ஒரு மனிதனாகவே காட்டிக்கொண்ட பொழுதில், ஜடாயுவிற்கு எப்படி மோக்ஷம் அளிக்க முடியும் என்று கேட்டார். பட்டர் இதற்கு நம்பிள்ளை எவ்வாறு பதில் கூறுவார் என்று கேட்க, ஜீயர் உடனே, ஸத்யவானான ஸ்ரீராமன், அனைத்து உலகங்களையும் தன் ஸத்யம் பேசும் திறனாலே வெல்ல முடியும் என சாஸ்த்ரத்தை மேற்கோள் காட்டினார். பட்டர் அதே விளக்கத்தை  ராஜாவிடம் அளித்தார். அவரது விளக்கத்தினால் மகிழ்ந்த ராஜாவோ, பட்டரின் அறிவை மெச்சி அவருக்கு பெரும் செல்வம் அளித்தார். பட்டர் நம்பிள்ளையின் ஒரு வ்யாக்யானத்திற்கே இவ்வளவு மஹிமை இருப்பதை அறிந்து, அவருக்கே அனைத்து செல்வத்தையும் அளித்து விட்டார். பிறகு நம்பிள்ளையின் சிஷ்யராகி, அவருக்கே கைங்கர்யம் செய்யலானார். இவ்வாறு நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் நல்வழிக்கு மீண்டு வந்து நம்பிள்ளையின் பல சிஷ்யர்களில் ஒருவரானார்.

வேதவல்லி: பாட்டி, பட்டரும் நஞ்சீயரும் பல உயர்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள் என்று சொன்னீர்களே – நம்பிள்ளையும் நஞ்சீயரும் கூட அவ்வளவு ஸ்வாரஸ்யமான உரையாடல்களை மேற்கொண்டார்களா?

பாட்டி: ஆம் வேதவல்லி, நஞ்சீயரும் நம்பிள்ளையும் நல்ல உரையாடல்களை மேற்கொண்டனர். ஒரு முறை நம்பிள்ளை நஞ்சீயரிடம் “எம்பெருமானின் அவதாரங்களின் பயன் என்ன” என்று கேட்டார். பாகவத அபசாரம் செய்தவனை தண்டிப்பது தான் அவதாரத்தின் முக்கிய பயன் ஆகும்  என்றார் நஞ்சீயர்.  எம்பெருமான் க்ருஷ்ணாவதாரம் எடுத்ததே தன் பக்தர்கள் மீது பல அபசாரங்கள் செய்த துர்யோதனனைக் கொல்வதற்காகத்தான். நரஸிம்ஹனாய் அவதாரமெடுத்ததே, தன் பக்தனான ப்ரஹ்லாதனை கொடுமைப்படுத்திய ஹிரண்யகசிபுவை கொல்வதற்கு. அதனால், அனைத்து அவதாரங்களின் முக்கிய நோக்கமே, பாகவத ஸம்ரக்ஷணமாகும்.

வ்யாசன் : பாட்டி, பாகவத அபசாரம் என்றால் என்ன?

பாட்டி : நஞ்சீயர் மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நம்மை ஸமமாக எண்ணுவது பாகவத அபசாரம் என்கிறார். அவர்களது பிறப்பு, ஞானம் போன்றவற்றை மனதில் கொள்ளாது, மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை நம்மை விட உயர்வாகத்தான் நடத்த வேண்டும் என்று விளக்குகிறார்.  ஆழ்வார்களைப் போலவும் மற்ற பூர்வாசார்யர்களைப் போலவும் நாமும் எப்பொழுதும் மற்ற பாகவதர்களின் பெருமை தோற்ற பேசவேண்டும் என்றும் சொல்வார். மற்ற தேவதாந்தரங்களைச் சென்று சேவித்தல் முற்றிலும் அர்த்தமற்றது என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

அத்துழாய் : பாட்டி, நம்பிள்ளை அதை எவ்வாறு விளக்குவார்?

பாட்டி: ஒரு முறை ஒருவர் நம்பிள்ளையிடம் வந்து “நீங்கள் தேவதாந்தரங்களான (இந்திரன், வருணன், அக்னி, ஸூர்யன் ஆகியோர்) உங்கள் நித்யகர்மாவில் துதிக்கிறீர்கள், பின் ஏன் அவர்களை கோயில்களில் துதிக்க மாட்டேன் என்கிறீர்கள்?” என்றார். நம்பிள்ளை சட்டென்று ஒரு உன்னதமான பதிலளித்தார். அவர் கேட்டார் “யாகத்தில் நெருப்பை துதிக்கிறீர்கள் ஆனால் ஏன் மயான பூமியிலிருக்கும் நெருப்பை விட்டு விலகியே இருக்கிறீர்கள்?” நித்ய கர்மங்கள் பகவத் ஆராதனமாகச் செய்யலாம், எம்பெருமானை தேவதைகளுக்கு அந்தர்யாமியாகக் கொண்டு. ஆனால் அதே சாஸ்த்ரம் நாம் எம்பெருமானைத்தவிர வேறு எவரையும் தொழக்கூடாது என்று சொல்வதால், நாம் மற்ற கோயில்களுக்குச்  செல்வதில்லை.

வேதவல்லி: பாட்டி, எங்கள் அம்மா இது மிகுந்த சர்ச்சைக்குரிய  விஷயமென்றும், யாரும் இதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் சொல்வார்.

பாட்டி: உணர்ந்து ஒத்துக்கொள்ள மறுப்போர்க்கு, சில உண்மைகள், கசப்பு மாத்திரைகளை போல. ஆனால் எப்படிக் கசப்பு மருந்துகள் நம் உடலுக்கு நல்லது செய்யுமோ, இந்த உண்மை நம் ஆத்மாவிற்கும் உடலுக்கும் நன்மை செய்யும். ஒத்துக்கொள்ள மறுப்பதால் மட்டுமே வைதிக உண்மைகளை மறுக்கவோ திரிக்கவோ முடியாது. ஒருவருடைய ஆசார்யருடைய அருளாலும் எம்பெருமானுடைய நிர்ஹேதுக  கருணையாலும், அனைவரும் இந்த உண்மையை உணர்ந்து கொள்வார்கள். ஆனால், நம்மாழ்வார் சொல்வது போல், அனைவரும் ஸ்ரீமந்நாராயணனின் பரத்வத்தை உணர்ந்து கொண்டு மோக்ஷமடைந்தால், அவரது லீலைகளை நடத்துவதற்கு ஒரு உலகம் இருக்காதே, அதனால் தான் இந்த தாமதம். ஆழ்வார் மேலும் சொல்கிறார் “இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டு, உடனடியாகத் திருக்குருகூருக்குச் சென்று அங்குள்ள ஆதிப்பிரான் பெருமாளை சென்று சரணடையுங்கள்” என்று.

வ்யாசன் : பாட்டி, நம்பிள்ளை திருமணம் செய்து கொண்டாரா?

பாட்டி: ஆமாம், நம்பிள்ளைக்கு இரு மனைவியர். ஒரு முறை நம்பிள்ளை, தம்மைப் பற்றி என்ன எண்ணுகிறாள் என ஒரு மனைவியிடம் கேட்டார். அவள் நம்பிள்ளையை எம்பெருமானுடைய அவதாரமாக கருதுவதாகவும் அவரைத் தன் ஆசார்யனாக கொள்வதாகவும் கூறினாள். இதை கேட்டு இன்பமுற்ற நம்பிள்ளை தன்னைத் தேடி வரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எல்லாம் ததீயாராதனை கைங்கர்யத்தில்  (தளிகை செய்யும் கைங்கர்யம்) ஈடுபடுமாறு அவளைப் பணித்தார். ஆசார்யாபிமானத்தின் முக்கியத்துவத்தை இந்த சம்பவத்தின் மூலம் நமக்குக் காட்டுகிறார் நம்பிள்ளை.

பராசரன்: நம்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு கேட்பதற்கே ஸ்வாரஸ்யமாக உள்ளதே. அவருக்கு நிறைய உயர்ந்த சிஷ்யர்கள் இருந்திருக்க வேண்டும்.

பாட்டி: ஆம் பராசரா, நம்பிள்ளைக்கு ஆசார்ய புருஷர்களின் குடும்பங்களிலிருந்தே பல சிஷ்யர்கள் இருந்தார்கள். அவருடைய காலம் ஸ்ரீரங்கத்தில் நல்லடிக்கலாம் என்று வழங்கப்படுகிறது. வடக்கு திருவீதிப் பிள்ளையின் குமாரர்களான, இரு உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களான,  பிள்ளை லோகாசார்யார், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோரை நம் ஸம்ப்ரதாயத்திற்குக் கொடுத்தார், நம்பிள்ளை. வடக்கு திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகியராம் பெருமாள் ஜீயர், கந்தாடை தோழப்பர், நடுவில் திருவீதிப் பிள்ளை ஆகியோர் அவரின் மற்ற முக்கிய  சிஷ்யர்கள்.

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam

நம்பிள்ளை, பின்பழகியராம் பெருமாள் ஜீயருடன், ஸ்ரீரங்கம்

நாம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது, நம்பிள்ளையின்  மேற்சொன்ன சிஷ்யர்களைப் பற்றி கூறுகிறேன். அவர்களெல்லாம், நம்மிடத்தில் உள்ள எல்லையில்லாக்  கருணையால் உயர்ந்த க்ரந்தங்களையும் கொடுத்து, நம் ஸம்ப்ரதாயத்திற்குச் சிறந்த கைங்கர்யங்களையும்  செய்துள்ளார்கள்.

குழந்தைகளெல்லாரும் , நம்பிள்ளையின் பெருமைகள் மிக்க வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் உபதேசங்களைப் பற்றியும் எண்ணிக்கொண்டே அவரவர் வீட்டிற்குச் செல்கிறார்கள்.

அடியேன் பார்கவி ராமானுஜ தாசி

ஆதாரம் : http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-nampillai/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment