ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ராம லக்ஷ்மணர்களின் மிதிலாநகர் ப்ரயாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< விச்வாமித்ரரின் வேள்வியைக் காத்த ராம லக்ஷ்மணர்கள்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள்.

பராசரன்: விச்வாமித்ர முனிவரின் யாகம் இனிதே நடந்தது என்று சொன்னீர்கள் பாட்டி. பிறகு என்ன நடந்தது? ராம லக்ஷ்மணர்கள் தங்கள் அரண்மனைக்குப் புறப்பட்டார்களா?

பாட்டி: சொல்கிறேன் பராசரா. அதற்கு முன்பாக, ராமபிரான் விச்வாமித்ர முனிவரின் வேள்வியைக் காத்து அரக்கர்களை முடித்த சரித்திரத்தை ‘மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்விகாத்து வல்லரக்கருயிருண்டமைந்தன் காண்மின்’ என்று பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வார் அருளிச்செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது குலசேகர ஆழ்வாருடைய திருவடித்தாமரைகளை ப்ரார்தித்துக்கொண்டு கதையைத் தொடங்குகிறேன்.

ராம லக்ஷ்மணர்கள் முனிவர்களோடு மிதிலா நகருக்குப் புறப்பட்டார்கள். ராம லக்ஷ்மணர்களின் அவதாரத்தில் மிகவும் முக்கியமான சம்பவம் நிகழ இருக்கிறது.

வேதவல்லி: சொல்லுங்கள் பாட்டி. கேட்க ஆவலாக இருக்கிறோம்.

பாட்டி: ராம லக்ஷ்மணர்கள் யாகத்தை ரக்ஷித்து அன்றிரவுப் பொழுதை ஸித்தாச்ரமத்தில் கழித்தனர். பொழுது புலர்ந்தது. அங்குள்ள ரிஷிகள் விச்வாமித்ர மாமுனியின் அனுமதி பெற்றுக்கொண்டு ராமனை நோக்கி, “ராமா! மிதிலா நகரத்து அரசனாகிய ஜனக மஹாராஜன் ஓர் யாகம் நடத்தப் போகின்றான். அதற்கு நாங்கள் அனைவரும் போகப்போகின்றோம். நீயும் எங்களுடன் கூட வந்து அங்கு மிகவும் ஆச்சரியமான ஓர் உயர்ந்த வில்லையும் ஜனக ராஜனையும், அவரது மகளான ஸீதையையும் காணவேண்டும். முன்பொரு காலத்தில், இந்த ஜனக மஹாராஜனுடைய திருவம்சத்தில் தோன்றிய தேவராதனென்னும் ஒரு அரசன் யாகம் செய்ய, அப்பொழுது தேவர்களால் கொடுக்கப்பட்ட வில் ஜனகனுடைய அரண்மனையில் இருப்பது. தேவர்களோ கந்தர்வர்களோ அசுரர்களோ அரக்கர்களோ எவராலும் அவ்வில்லைவளைத்து நாணேற்றமுடியவில்லை. இனி மனிதர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? மிகுந்த சக்தி பொருந்தியவர்கள் அவ்வில்லை ஏந்தி நாணேற்ற அசக்தர்களாய் வந்த வழியே திரும்பிப் போயினர். நீ வந்தாயானால் அவ்வில்லைவளைத்து நாணேற்றி ஸீதையைப் பெறக்கூடும்’ என்று மொழிந்தனர்”.

வ்யாசன்: ராம லக்ஷ்மணர்கள் விச்வாமித்ர மாமுனியுடன் மிதிலைக்குப் புறப்பட்டார்களா பாட்டி? மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: பின்பு விச்வாமித்ர மாமுனி, ராம லக்ஷ்மணர்களுடன் ஸித்தாச்ரமத்தினின்றும் புறப்பட்டு வடக்கு திசை நோக்கிப் பிரயாணத்தைத் தொடங்கினார். அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் பலபல வண்டிகளில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

அத்துழாய்: அம்மூவரும் மிதிலா நகரத்தை அடைந்தார்களா? மேலும் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது பாட்டி.

பாட்டி: நெடு நேரம் பிரயாணித்ததால் ராம லக்ஷ்மணர்கள் முனிவர்கள் அனைவரும் சோணநதத்தின் கரையில் உட்கார்ந்தனர். அப்பொழுது விச்வாமித்ர முனிவர் ராம லக்ஷ்மணர்களுக்குப் பற்பல வரலாறுகளைக் கூறினார். இதுபோல வரலாறுகளைக் கூறிய முனிவர் அகலியை என்பவள் சாபத்தினால் பெண்ணுருவம் இழந்த வரலாற்றையும் கூறினார்.

வேதவல்லி: அகலியை என்பவள் யார் பாட்டி ? எதற்காக சாபம் பெற்றாள்? அவள் சாபம் விமோசனமாயிற்றா? மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: அவள் சாபம் தொலைந்து மீண்டும் இழந்த பெண்ணுருவத்தைப் பெற்றாள். யார் அவளுடைய சாபத்தைப் போக்கினார் என்பதை நீங்கள் அடுத்த முறை வரும்போது சொல்கிறேன். சற்று நேரத்தில் பெருமாளுக்குத் தளிகை அமுதுசெய்தாகிவிடும். இங்கேயே நீங்கள் பெருமாள் ப்ரசாதத்தை எடுத்துக்கொண்டபிறகு உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகளும் பெருமாளுக்கு அமுதுசெய்த ப்ரசாதத்தை உண்டுவிட்டு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment