ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< மிதிலைநகர் அடைந்தனர் தாசரதிகள்
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன்.
குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.
வ்யாசன்: சென்ற முறை கௌதமமுனிவர் மகனான சதானந்த முனிவர், தமது தாயான அகலிகை சாபவிமோசனம் பற்றி அறிந்து மகிழ்ந்தாரென்றும், மேலும் விச்வாமித்ரருடைய பெருமைகளை ராம லக்ஷ்மணர்களுக்கு எடுத்துரைத்தார் என்றும் சொல்லிமுடித்தீர்கள் பாட்டி.
பாட்டி: மிக நன்றாக நான் சொன்ன விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறாயே! மிக்க மகிழ்ச்சி. சதானந்த முனிவர் விச்வாமித்ரருடைய பெருமைகளை ராம லக்ஷ்மணர்களுக்கு எடுத்துரைக்கும்போது, ஜனக மன்னனும் கேட்டுக்கொண்டிருந்தார். இப்பேற்பட்ட பெருமையுடைய விச்வாமித்ர முனிவர், தசரத புத்ரர்களோடு தன் அரண்மனைக்கு எழுந்தருளியது தனக்குப் பெரும் பாக்யம் என்றார் ஜனகர். அப்பொழுது சூரிய அஸ்தமன காலம் ஆனதனால், மீண்டும் மறுநாள் காலையில் சந்திப்பதாகக் கூறி விச்வாமித்ரரிடம் விடைபெற்றுக்கொண்டு ஜனக மன்னன் தன் இருப்பிடம் சேர்ந்தார். விச்வாமித்ரரும் தாசரதிகளும் விடுதிக்குச் சென்று சேர்ந்தார்கள்.
வேதவல்லி: மறுநாள் காலையில் ஜனகமன்னன் விச்வாமித்ர முனிவரை சந்தித்தாரா? என்ன நடந்தது பாட்டி.
பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். மறுநாள் காலையில் ஜனகமன்னன் தன்னுடைய அனுஷ்டானங்களையெல்லாம் முடித்துக்கொண்டு, ராம லக்ஷ்மணர்களையும் விச்வாமித்ர முனிவரையும் ஸபைக்கு வரவழைத்து உபசாரங்களையெல்லாம் செய்து, “அடியேனுக்கு ஏதேனும் உத்தரவிடவேண்டும்” என்று கேட்டதும் விச்வாமித்ர முனிவர், “மன்னனே! உன்னிடம் இருக்கின்ற பெரும்புகழ்பெற்ற வில்லை ராம லக்ஷ்மணர்கள் காண விரும்புகின்றனர்; அதை இவர்களுக்குக் காட்டவேண்டும்” என்றார். அதுகேட்ட ஜனகமன்னன், தன்னிடம் அந்த வில் வந்துசேர்ந்த வரலாற்றையும் எடுத்துக்கூறினார். முன்பு சிவனால் அந்த வில் எங்கள் குலத்தில் பெரும்புகழோடு விளங்கிய தேவராதர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த சிவதனுசுவை நாணேற்றி வளைக்கும் வல்லமையுடையவருக்கே எனதருமை மகளான சீதையை விவாஹம் செய்து வைக்கவேண்டுமென்று தீர்மானித்துள்ளேன். இதனை அறிந்த பற்பல அரசர்களும் இங்கு வந்து, இவ்வில்லைத் தூக்கிப்பார்க்கவும் முடியாமல் போய்விட்டனர். என்னுடைய பெண்பிள்ளையின் விவாஹத்திற்கு நான் அறிவித்த இந்த நிபந்தனையைத் தங்களுக்குப் பெரும் அவமானமாகக்கருதி, என்னோடு போர் புரிவதற்காக இந்த மிதிலாநகரை சூழ்ந்துகொண்டார்கள். முனிவரே! அவ்வாறு ஓராண்டு காலம் போர் நடந்ததால் எனது படைகள் பெரும்பாலும் நாசமடைந்தன. பிறகு நான் கடுந்தவம் புரிந்து தேவர்களை மகிழ்வித்து சதுரங்க சேனைகளையும் பெற்றேன். பிறகு அந்த அரசர்களோடு போர்புரிந்து அவர்களையெல்லாம் பங்கமடைந்து தொலையும்படி செய்துவிட்டேன். அப்பேற்பட்ட வலிமைபொருந்திய சிவதனுசுவை ராம லக்ஷ்மணர்களுக்குக் காட்டுகின்றேன். ராமபிரான் இவ்வில்லை நாணேற்றி முறிப்பானாகில், என் பெண்பிள்ளையான சீதையை அவனுக்கு விவாஹம் செய்து வைப்பேன் என்றார்.
பராசரன்: கேட்பதற்கே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது பாட்டி. ராமபிரான் அநாயாசமாக அவ்வில்லை முறித்திருப்பானே; மேலும் சொல்லுங்கள்..
பாட்டி: இதே ஆவலோடு நாளைவரை காத்திருங்கள் குழந்தைகளே. நாளை நீங்கள் வரும்போது மேலும் சுவையான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.
குழந்தைகளும் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.
அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி
வலைத்தளம் – http://pillai.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org